அதிமுக தேர்தலில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும், அதிமுக தலைமை அலுவலகத்துக்குப் பாதுகாப்பு கேட்டும் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக உட்கட்சித் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த கட்சிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் முயற்சி செய்துவருகின்றனர். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், சிலரை அனுப்பி குழப்பம் ஏற்படுத்த முயல்வதை எப்படி அனுமதிக்க முடியும்? ஜனநாயக முறையில் நடைபெற உள்ள அதிமுக உட்கட்சித் தேர்தலைப் பொறுத்துக்கொள்ள இயலாத சிலர் சதி செய்கின்றனர். தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்ற காவல் ஆணையரிடம் மனு கொடுத்துள்ளேன். யாரும் நுழைந்து கலகம் ஏற்படுத்தாத வகையில் அதிமுக அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். தகுதியுடையவர்கள் யார் வேண்டுமானாலும் அதிமுக தேர்தலில் போட்டியிடலாம், யாரும் தடுக்க முடியாது" எனத் தெரிவித்தார்.