மீத்தேனுக்கு எதிராக தனது இறுதி மூச்சு வரை போராடி தன்னுயிரை நீத்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எடுத்த சபதத்தை நிறைவேற்று என்று தமிழகத்தின் அத்தனை அரசியல் கட்சிகளும், விவசாயிகளும், இளைஞர்களும், மாணவர்களும், குழந்தைகளும் ஒன்றாக இணைந்து மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை சுமார் 600 கி. மீ தூரத்திற்கு கைகோர்த்த நின்றார்கள். ஜல்லிக்கட்டுக்கு திரண்டது போல விளை நிலைங்களைக் காக்க தமிழக மக்கள் ஒன்றுபட்டுவிட்டார்கள்.

இந்த மனித சங்கிலிக்கு பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் அழைப்பு கொடுத்தது. அ.தி.மு.க, பா.ஜ.க அல்லாத அத்தனை அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் கைகோர்த்து நின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தில் பேரழிப்பிற்கு எதிரான பேரியத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் தலைமையில் திரண்டனர். தியாகு, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழநிமாணிக்கம், ஒரத்தநாடு எம்.எல்.ஏ புல்லட் ராமச்சந்திரன் என ஆயிரக்கணக்காணோர் திரண்டிருந்தனர். மல்லிபட்டினம், சேதுபாவாசத்திரம் என்று கரம் கோர்த்தனர்.

இந்த நிகழ்வில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிகமானோர் கலந்து கொண்டதுடன் ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்வோம் என்றனர். நெடுவாசல் போராட்டக்குழுவினர் முத்துக்குமரன் அறக்கட்டனை என்று ஆங்காங்கே திரண்டிருந்தனர்.

ஒருங்கிணைப்பாளர் லெனில் கூறும் போது.. மீத்தேன், ஷேல் கேஸ், போன்ற அத்தனையும் ஹைட்ரோ கார்ப்பன் என்ற ஒற்றை பெயரில் எடுக்க திட்டமிட்டு தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்க முடிவு செய்துவிட்டனர். ஆனால் விவசாயிகளின் விளைநிலங்களை அழிக்க விடமாட்டோம். இன்று 600 கி.மீ மனித சங்கிலி என்பது பெரிய போராட்டம். இதைவிடவும் அடுத்தடுத்து போராட்டங்களை நடத்துவோம். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க வேண்டும் என்றார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாடியில் தி.மு.க மாநில சொத்துப்பாதுகாப்புக்குழு அறந்தை ராஜன், தலைமையில் தி.மு.க மா.செ க்கள் ரகுபதி எம்.எல்.ஏ, பெரியண்ணன் அரசு எம்.எல்.ஏ, பொறுப்பு செல்லபாண்டியன் மற்றும் அனைத்துக் கட்சிகளும் போராட்டக்குழுக்களும் நீண்ட வரிசையில் கலந்து கொண்டனர். மீமிசல் வரை கரம் கோர்த்து நின்றனர். பல இடங்களிலும் பெண்கள் அதிகமாக கலந்து கொண்டனர். கிழக்கு கடற்கரை சாலை இன்று மாலை மனித தலைகளாக தெரிந்தது.