திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் அரிய புத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் தனக்கு குடும்ப பிரச்சனை இருப்பதாக கூறி திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூர் கிராமத்தில் உள்ள ஜோதிடர் சசிகுமார் என்பவரிடம் ஜோதிடம் பார்க்க சென்றுள்ளார்.
அப்போது தங்கவேலிடம், “உங்களது தோட்டத்தில் தங்கப் புதையல் உள்ளது” என்று கூறியுள்ளார் சசிகுமார். மேலும் தான் அதை எடுத்துத் தருவதாக ஆசை வார்த்தையும் கூறியுள்ளார். இதை நம்பிய தங்கவேல், ஜோதிடர் சசிகுமார் கூறிய அறிவுரைப்படி பூஜைகள் செய்துள்ளார். இதனிடையே சிறிது சிறிதாக அவ்வப்போது பணம் மற்றும் தங்க நகைகளை தங்கவேலிடமிருந்து ஜோதிடர் சசிகுமார் பெற்றுள்ளார். அந்த வகையில் 22 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் 45 சவரன் தங்க நகைகளையும் வாங்கிக் கொண்டவர், தனக்கு புல்லட் பைக், கார், செல்ஃபோன் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
அதன்படி ஜோதிடர் சசிகுமாருக்கு புல்லட் பைக், செல்ஃபோன், ஒரு கார் ஆகியவற்றை விவசாயி தங்கவேல் வாங்கிக் கொடுத்துள்ளார். பூஜைகள் செய்த ஜோதிடர் புதையல் எடுத்து தரவில்லை, ஒரு கட்டத்தில் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த தங்கவேல், சசிகுமாரிடம் புதையல் எடுத்துத் தராவிட்டால் வாங்கிய பொருட்களைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து புல்லட் பைக், கார், செல்ஃபோன் ஆகியவற்றைத் திருப்பிக் கொடுத்த ஜோதிடர் சசிகுமார், நகை மற்றும் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதனையடுத்து தங்கவேல் நகை மற்றும் பணத்தைக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
அதனால் தங்கவேல் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியாவிடம் புகார் அளித்துள்ளார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் இதுகுறித்து மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ஆறுமுகம், ஆய்வாளர் பானுமதி ஆகியோர் வழக்குப் பதிவுசெய்து திருப்பூர் மாவட்ட ஜோதிடர் சசிகுமாரை கைது செய்தனர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சசிகுமார் இன்று (14.04.2021) திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.