அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் ரஜினி ஆகியோர் நேற்று மாலை ரோந்துப் பணிக்காகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆனந்தவாடி டாஸ்மாக் கடை அருகே மர்மமான முறையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரும் அதன் அருகில் சென்று பார்த்தபோது அதில் சிலர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதி கொளக்குடியைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளையன், பெரம்பலூர் அருகே உள்ள பாலையூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமார் மற்றும் மேலும் சிலர் அந்த காரில் இருந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறியுள்ளனர். உடனே காரை சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சோதனை செய்தார். அதில் இரும்பு ராடு, இரும்பை அறுக்கும் இயந்திரம் மற்றும் பூட்டை உடைக்கும் இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்கள் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரும் ரமேஷை பிடித்து கைது செய்தனர். இதைக் கண்டு மிரண்டு போன மற்றவர்கள் அப்பகுதியில் உள்ள ஏரிக்குள் தப்பி ஓட்டம் எடுத்தனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். அங்கிருந்து மேலும் சில காவலர்கள் விரைந்து வந்தனர். மேலும் அப்பகுதி கிராம பொதுமக்களுக்கும் தகவல் அளித்து அவர்களும் ஓடி வந்தனர். அனைவரும் அந்த ஏரிக்குள் இறங்கி இரவிலும் தப்பி ஓடியவர்களைத் தேடிப் பிடித்தனர். அதில் இருவர் தப்பிவிட்டனர். நவீன் குமார் வெள்ளையன் ஆகிய மூவரும் கைது செய்து போலீஸ் விசாரணையில், அவர்கள் கும்பலாக காரில் வந்து அன்று இரவு ஆனந்தவாடி கிராமத்தின் அருகே உள்ள டாஸ்மாக் கடையை கொள்ளையடிக்கத் தயாராக வந்ததாகவும் அதற்குள் போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாகப் பிடிபட்டவர்கள் கூறியுள்ளனர்.
இதையடுத்து தப்பி ஓடிய மேலும் இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். டாஸ்மாக் கடையில் கொள்ளையிட முயன்றவர்களைப் போலீசார் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் இதுபோன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு உள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு நண்பர்கள் சிலர் ஆனந்தவாடி டாஸ்மாக் கடையில் சரக்கு அடித்து விட்டு சற்று தூரத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.