Skip to main content

விசிக ரயில் மறியல் போராட்டம்; காவல்துறையினருடன் தள்ளு முள்ளு 

Published on 21/12/2023 | Edited on 21/12/2023
Argument with police in vck train rally

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சிலர் அத்துமீறி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து நாடாளுமன்ற வளாகத்தில் கலர் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி தொடர் அமலில் ஈடுபட்டு வந்த 140 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் திமுக, திரிணாமுல்  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்டச் செயலாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் 40க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற பிருந்தாவன் எக்ஸ்பிரஸ்  விரைவு ரயிலை மறித்து தண்டவாளத்தில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 Argument with police in vck train rally

அப்போது காவல்துறையினர்,  ரயில்வே காவல்துறையினர் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கிடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டதால் ரயில் நிலையத்தில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 40 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். அதன்பின் ரயில் போக்குவரத்து அப்பாதையில் சீரானது. 

சார்ந்த செய்திகள்