நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. டீ தொடர்ந்து உத்தரப்பிரதேசம் - 10, மேற்கு வங்கம் - 4 ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட அனந்த்நாக் - ரஜௌரி - 1, தாத்ரா நகர் ஹவேலி, டாமன் டையூ ஆகிய தொகுதிகளிலும் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
உத்திர பிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அவோன்லா தொகுதியில் இஸ்லாமியப் பெண்களை வாக்களிக்க விடாமல் போலீஸ் தடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவோன்லா தொகுதியில் உள்ள 116 வது எண் கொண்ட வாக்கு சாவடியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இஸ்லாமிய பெண்களை ஆதித்யநாத் அரசு போலீசார் விரட்டி அடித்ததால் வாக்களிக்க முடியவில்லை என சமாஜ்வாதி கட்சி இது தொடர்பாக வீடியோவுடன் கூடியப் புகாரைக் கொடுத்துள்ளது.
'தேர்தல் ஆணையமும், உத்திர பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரியும் இதைக் கவனித்தீர்களா' எனக் குறிப்பிட்டுள்ள அகிலேஷ் யாதவ், இந்த வீடியோ காட்சியைப் பதிவு செய்துள்ளார். தேர்தல் தோல்வி அச்சத்தில் பாஜக அராஜகத்தில் ஈடுபடுகிறது. தேர்தல் நியாயமாக நடைபெறுவதைத் தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தேர்தலில் மக்கள் உரிய பதிலடி தருவார்கள்' என அவர் தன்னுடைய குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார்.