தமிழகத்தில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி காட்டிவரும் நிலையில், அரசு அலுவலகங்களில் அவ்வப்போது அதிரடியாகச் சோதனை செய்து லஞ்சம் பெறும் அதிகாரிகளையும் கைது செய்வதோடு, சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாகக் கடந்த 2016ல் நடைபெற்ற வழக்கு தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள திருச்சிராப்பள்ளி கூட்டுறவு வீடு கட்டுமான சங்கம் செயலாளராக இருந்த கார்மேகம் என்பவர் 2016 ஆம் ஆண்டு அண்ணாநகரில் கட்டுமான சங்கத்திற்குச் சொந்தமான 7 பிளாட் நிலத்தை விற்பனை செய்துள்ளார்.
அன்றைய அரசு மதிப்பு விலையான சதுர அடி 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யாமல், இந்த நிலத்தினை சதுர அடி 150 ரூபாய் வீதம் 7 பிளாட்டுகளையும் விற்பனை செய்துள்ளார். இதனால் அரசுக்கு 6 கோடியே 55 லட்சத்து 97ஆயிரம், இழப்பீடு ஏற்பட்டது. எனவே இதுதொடர்பாக 2018 -19 ஆண்டில் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று(13.10.2021) காலை திருச்சி புதிய செல்வாநகா் பகுதியில் உள்ள விசார்த்தி கார்டனில் உள்ள அவருடைய வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது சில பத்திரங்களும், 45 சவரன் நகையும், 2லட்சத்து 70ஆயிரம் பணமும், 150 சவரன் நகை வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்ததும், 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரும் இருப்பதை லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் கைப்பற்றியுள்ளனர்.