Skip to main content

தமிழக அரசின் முடிவுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வரவேற்பு..!

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

Annamalai University Employees Union welcomes the decision of the Government of Tamil Nadu

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தை, தமிழக அரசு இணைவு பல்கலைகழகமாக அறிவித்ததை அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வரவேற்றுள்ளது. இதற்காக அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் மனோகரன், பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை சங்க நிர்வாகிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர் கூறியதாவது; அண்ணாமலை பல்கலைக்கழகத்தை கடந்த 2013ம் ஆண்டு தமிழக அரசு அரசுடைமையாக்கியது. அப்போது பல்கலைக்கழக நிர்வாகம் நிதி நெருக்கடியில் இருந்ததால், ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்க முடியாத நிலை இருந்தது. இதையடுத்து தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதும், எங்கள் ஊழியர் சங்கத்தின் சார்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து எங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்து இருந்தோம். 

 

அதனடிப்படையில் பல்கலைக்கழகத்தின் நிதி சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில் பல்கலைக்கழக தனி அதிகாரியாக இருந்த சிவதாஸ் மீனா ஐ.ஏ.எஸ். பரிந்துரைத்த தீர்வு படி கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைத்து மாணவர்கள், ஊழியர்கள் ஆசிரியர்கள் நலன் கருதி இணைவு பல்கலைக்கழகமாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு எங்கள் ஊழியர் சங்கம் நன்றியும், வரவேற்பும் தெரிவித்துக்கொள்கிறது.

 

தமிழக அரசு, பல்கலைக்கழகத்தில் உள்ள தொகுப்பூதிய, தினக்கூலி ஊழியர்கள் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்திலிருந்து பணி நிரவல் சென்ற ஊழியர்களை அருகில் உள்ள மாவட்டங்களில் இடமாற்றம் செய்தும், மிக விரைவில் மாற்றம் செய்யப்பட்ட ஊழியர்களைப் பல்கலைக்கழகத்திற்குத் திரும்ப அழைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார். 

 

இந்தச் சந்திப்பின்போது, அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் மனோகரனுடன், ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பழனிவேல், பொருளாளர் தவச்செல்வன், இணை பொதுச் செயலாளர் புண்ணியமூர்த்தி, இணை பொருளாளர் இளஞ்செழியன் உள்பட ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.


 

சார்ந்த செய்திகள்