கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் இருந்த ஜமேசா முபீன் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து பின்னர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
உயிரிழந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபீனிடம் ஏற்கனவே தேசியப் பாதுகாப்பு முகமை அதிகாரிகள் விசாரணை செய்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டதில் அதில் சில ரசாயன வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சார்கோல், சல்பர் போன்ற நாட்டு வெடிகுண்டு தயார் செய்யக்கூடிய சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் நடந்த 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமைக்கு முன் தினமான சனிக்கிழமை 22ம் தேதி நள்ளிரவில் ஜமேசா முபீன் தன் வீட்டிலிருந்து ஒரு மர்மப் பொருளை ஐந்து பேருடன் எடுத்து சென்றது அவர் வீட்டுப் பகுதியில் அமைந்துள்ள சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அந்த சி.சி.டி.வி காட்சிகளின் உதவியோடு காவல்துறையினர் ஜமேசா முபீனுடன் இருந்த ஐந்து பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, “இந்தத் தீவிரவாதியின் வீட்டையும் அவரின் சகாக்களின் வீட்டையும் சோதனை செய்ததில் கிட்டத்தட்ட 50 கிலோவுக்கும் மேலாக அமோனியம் நைட்ரைட், பொட்டாஷியம், சோடியம் பேட்டரி உள்ளிட்ட பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர். இது உண்மை நிலவரம். ஆனால் இது வரை காவல்துறை இதனை வெளியே சொல்லவில்லை. இதனை ஏன் தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது என்பதும் தெரியவில்லை.
பாஜக நேற்று இது தற்கொலைப் படை தாக்குதல் என்று சொன்னோம். அதற்கு காரணம், ஜமேசா முபின் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 21ம் தேதி அவரது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை மாற்றுகிறார். ஆங்கிலத்தில் அதனை அவர் எழுதியுள்ளார். அதனை தமிழில் மொழி பெயர்த்தால், ‘என் இறப்புச் செய்தி உங்களுக்கு தெரியும்போது நான் செய்த தவறை மன்னித்துவிடுங்கள். என் குற்றங்களை மறந்துவிடுங்கள். என் இறுதிச் சடங்கில் பங்கேறுங்கள். எனக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.’ இவை அனைத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ். தற்கொலைப் படையினர் பயன்படுத்தும் வார்த்தைகள். இதையேதான் ஜமேசா முபீன் பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக அழுத்தம் கொடுத்தபிறகு நேற்று இரவு ஐந்து பேரைக் கைது செய்துள்ளதாக கோவை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழ்நாடு காவல்துறை வெளியிடாத விசித்திரமான பத்திரிகைச் செய்தியைக் கோவை காவல்துறை வெளியிட்டுள்ளது. காரணம், இந்த ஐந்து பேரையும் ஏன் கைது செய்தோம், எந்தப் பிரிவுகளின் கீழ் கைது செய்திருக்கிறோம் எனும் எந்தத் தகவலும் இல்லை. வெறும் சிலிண்டர் வெடி விபத்தில் ஐந்து பேரைக் கைது செய்துள்ளோம் என்று மட்டுமே உள்ளது. ஒரு பாஜக நிர்வாகி ஒரு பேஸ்புக் பதிவு இட்டால் கூட உடனடியாக கைது செய்து அவர்கள் என்ன போட்டார்கள், ஏன் கைது, எந்தப் பிரிவின் கீழ் கைது என அனைத்தும் ஐந்து பக்க செய்தி அறிக்கையாக வெளியிடுவார்கள். ஆனால், ஒரு தற்கொலைப் படைத் தாக்குதலில் ஐந்து பேரை ஏன், எந்தப் பிரிவின் கீழ் கைது செய்துள்ளோம் என எந்தத் தகவலும் இல்லை.
இன்னும் ஒரு தகவலைச் சொல்கிறேன், இந்த சம்பவம் தொடர்பாக கோவை காவல்துறையினர் எட்டுப் பேரை சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். காவல்துறையின் மாண்பைக் கருத்தில் கொண்டு அவர்களின் பெயரை நாங்கள் வெளியிடவில்லை. காவல்துறை டி.ஜி.பி. இதனை இல்லை என்று மறுக்க முடியாது. இவர்கள் மட்டுமின்றி இன்னும் எட்டுப் பேரையும் காவலில் வைத்துள்ளனர். ஏன் அவர்கள் மீது உபா சட்டம் பாயவில்லை. 50 கிலோவுக்கும் மேலாக அமோனியம் நைட்ரைட், பொட்டாஷியம், சோடியமை எதற்கு தீபாவளிக்காக வாங்கி வைத்துள்ளனர்.
உள்துறையில் உள்ள 60 சதவீத டி.ஒய்.எஸ்.பி.க்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களாக உள்ளனர். அதனால் தான் உள்துறை டி.ஜி.பி. மற்றும் ஏ.டி.ஜி.பி.யின் மீது ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. லாவண்யா, கள்ளக்குறிச்சி, தென் தமிழ்நாட்டில் மதமாற்றம் வரை ஒரு என்.ஜி.ஓ.வும் மிஷனரியும் செய்யக்கூடிய வேலையை இன்று உள்துறை செய்து கொண்டிருக்கிறது.
நம் உள்துறை தோற்றுவிட்டது. இந்தியாவிலேயே ஒரு மோசமான உள்துறை நம்மிடம் உள்ளது என முதலமைச்சர் ஒப்புக்கொள்ள இன்னும் எத்தனை நாட்கள் வேண்டும். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பாஜக சார்பில் கடிதம் எழுதியுள்ளேன். அதில் சம்பவம் தொடர்பாக காவல்துறை எதையோ முடி மறைக்கின்றனர் என எழுதியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.