தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி வன்னியர்களுக்கு 10.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸடாலின், “இப்போது நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, அந்தக் கூட்டணிக் கட்சியோடு பேசி, நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதற்குப்பிறகுதான் இதை அமல்படுத்த முடியும்” என்று பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜி.கே.மணியின் கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர், “முன்னாள் முதல்வர் கலைஞர்தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார். ஆனால் அவரை அந்த சமூகத்திற்கு எதிரானவர் போன்று சித்தரிக்கும் வேலையை பாமக தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த இடஒதுக்கீடு போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்தபோது காக்கைக் குருவிபோல் சுட்டுக் கொன்றது யார் என்பதை மறந்துவிட்டு அவர்களோடு கூட்டணி அமைத்தீர்கள். 20 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எதிரியாகக் காட்டினீர்கள். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலே 10.5 சதவிகிதம் கொடுத்த அஇஅதிமுகவையும் கைவிட்டுவிட்டீர்கள். சமூக நீதிக்கு எதிராக இருக்கும் பாஜகவுடன் தற்போது கைகோர்த்துள்ளீர்கள் என பதிலடி கொடுத்தார். நீண்ட நேரம் தொடர்ந்து அவரின் உறையில் பாமக மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்த நிலையில் இன்று செதியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, “வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக விவாதத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று அவரோடு விவாதம் நடத்த நான் தயாராக இருக்கிறேன். தேதி, இடம், நேரம் ஆகியவற்றை அமைச்சர் சிவசங்கரே முடிவு செய்து அழைக்கட்டும். எப்போது அழைத்தாலும் விவாதத்திற்கு வருவதற்கு நான் தயாராக உள்ளேன்.
திண்டிவனத்திலிருந்து ராமதாஸ் குரல் ஒலிப்பதாக அமைச்சர் சிவசங்கர் சொல்கிறார். அந்த குரல் மட்டும் ஒலிக்க வில்லை என்றால் சிவசங்கர், அமைச்சராகவே ஆகியிருக்க முடியாது. இது தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு கொடுப்பதால் மற்ற சமூகங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. இது வன்னியர்கள் சார்ந்த பிரச்சனை அல்ல; தமிழகத்தின் வளர்ச்சி சார்ந்த பிரச்சனை. தற்போது கலைஞர் முதலமைச்சராக இருந்திருந்தால் எங்களுக்கு இந்த உள் ஒதுக்கீடு கேட்காமலே கிடைத்திருக்கும்.
தமிழ்நாட்டில் முறையாக சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்தால் பட்டியலின மக்களுக்கு தற்போது வழங்கும் 18 சதவீதத்துக்கு பதிலாக 22 சதவீதம் கிடைக்கும். தமிழக முதலமைச்சர் சாதிவாரி கணக்கெடுப்பிற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் வித்தியாசம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. பீகாரில் சாதி வாரி கணக்கெடுப்பை நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. அங்கு இட ஒதுக்கீடு வரம்பு மீறியதை தான் ரத்து செய்து இருக்கிறார்கள்.
இது புரியாமல் சட்டப்பேரவையிலும், வெளியிலும் தமிழக முதலமைச்சர் பொய் சொல்லி வருகிறார். தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கும், அருந்தியர்களுக்கும் எந்த சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது? எந்தவிதமான கணக்கெடுப்பும் நடத்தாமல் எம்பிசிக்கு 20 சதவீத ஒதுக்கீடு கொடுக்க முடியுமானால் வன்னியர்களுக்கும் உள் ஒதுக்கீடு கொடுக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக மீண்டும் தமிழக முதலமைச்சரை சந்திப்பேன். சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இதற்காக தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.
மேலும், “கள்ளக்குறிச்சியில் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தான் சாராயம் விற்கப்படுகிறது என்பது அங்குள்ள அனைவருக்குமே தெரியும். ஒரு எம்எல்ஏவின் தம்பி தான் இதை முழுவதுமாக கவனித்துக் கொள்கிறார். சாராயம் காய்ச்சிபவர்களும் அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தும் எங்கள் மீது வழக்கு தொடுக்கிறார்கள். இது வேடிக்கையாக உள்ளது. எங்களிடம் தேவையான அளவிற்கு ஆதாரங்கள் உள்ளன. இதை சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நாங்கள் எதிர்கொள்வோம்” என்றார்.