அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பாற்றுவதற்காக என்று கூறி மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டித்துள்ள முதலமைச்சர், அதற்கு நேர்மாறாக நோய்தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இதன் மூலம் முந்தைய ஆட்சியாளர்களைப் போலவே தற்போதைய அரசுக்கும் மக்களின் உயிரைப் பற்றி துளியும் அக்கறை இல்லை என்பதும், 'யார் எப்படி போனாலும் தங்கள் கஜானா நிரம்பினால் போதும்' என்று நடந்து கொள்வதும் மிகமோசமான செயல்பாடாகும்.
ஒரு பக்கம் நிவாரணத் தொகை கொடுப்பது போல் கொடுத்து, அதனை டாஸ்மாக் வழியாக பிடுங்கிக் கொள்ளும் தந்திரத்தையே, இவர்களும் பின்பற்றுவது பெரும் அவலமாகும்.
எனவே, கரோனா நோய் தொற்றும் மையங்களாக மாறுவதற்கு வாய்ப்புள்ள டாஸ்மாக் கடைகளை திறக்கும் அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்." இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.