கொரோனா ஊரடங்கு காலத்தில் நியமிக்கப்பட்ட தற்காலிக செவிலியர்கள் பணிநீட்டிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரக் காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதன் பின் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அவர்கள் யாருக்கும் பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்கிற வகையில் ஒரு மாற்று யோசனையின் படி மாவட்ட வாரியாக இருக்கிற அமைப்புகளின் சார்பில் மக்களைத் தேடி மருத்துவம், நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் போன்ற துறைகளில் இருக்கும் காலிப் பணியிடங்களை இவர்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம்.
இதுவரை தற்காலிகப் பணி ஊதியமாக 14,000 ரூபாய் பெற்று வந்த நிலையில், புதிதாக சேரப்போகும் பணிகளில் 18000 ரூபாய் வரை கிடைக்கும். அது மட்டும் அல்ல, ஏற்கனவே இருக்கிற தற்காலிகப் பணி நியமனங்களின் மூலம் பெரும்பாலானவர்கள் தலைமை மருத்துவமனைகளில் தான் பணியாற்றி வருகிறார்கள். சிலர் நெடுநாட்களாக அவரவர்களின் சொந்த ஊர்களுக்குப் பக்கத்திலேயே பணி மாறுதல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வந்தார்கள்.
தற்காலிகச் செவிலியர்களைப் பணியிடமாற்றம் செய்வது இயலாத காரியம் என்பதால் அவர்களுக்கு அது கொடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், மாவட்ட நல வாரியம் மூலம் வழங்கப்படும் இந்தப் பணி அவர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக இருக்கும்.
இந்நிலையில், செவிலியர்கள் எங்களுக்கு ஏற்கனவே இருப்பது போன்று டிஎம்எஸ் ஒப்பந்த பணியாளர்கள் என்ற அடிப்படையில் அதிலேயே பணி நீடிக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்தார்கள். அதற்காகத் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். இன்று அவர்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து ஏறக்குறைய இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணி நியமன ஆணையையும் எங்களிடத்தில் காட்டினார்கள்.
இது எப்படி இருந்தாலும், செவிலியர்களின் பணிப் பாதுகாப்பிற்காக அரசு உத்தரவாதம் அளிக்கிறது என்பதுதான் அவர்களிடம் சொல்லப்பட்டது. உடனடியாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது நீங்கள் விண்ணப்பியுங்கள். உங்கள் அத்தனை பேருக்கும் பணி உத்தரவாதம் தருகிறோம் என்று அவர்களிடத்தில் சொல்லி உள்ளோம். அவர்களும் யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.