முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் போதைப் பொருட்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிகாரிகள், தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்தும் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் கஞ்சா, குட்கா குற்றங்களில் ஈடுபடுபவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வது, வங்கிக் கணக்குகள் முடக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாகப் போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும், “தன் காவல் சரகத்தில் ஒரு கடையில் கூட கஞ்சா விற்கவில்லை” என்று ஒவ்வொரு காவல் நிலைய அதிகாரியும் அறிவிக்கும் நிலை வர வேண்டும் என்றும், "தன் உட்கோட்டத்தில் அப்படியொரு பொருட்கள் நடமாட்டமே இல்லை" என்று காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள், உதவி ஆணையர்கள் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் காலம் மாற வேண்டும் என்றும், எல்லாவற்றையும் விட தன் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை எதுவுமே இல்லை என்ற நிலையை எட்டி விட்டோம் எனப் பெருமிதத்துடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தெரிவிக்கும் நிலை வரவேண்டும் என்றும், அப்போது தான் தம்மைப் போல் – தங்கள் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்ற நிம்மதி பெற்றோர்களுக்கும், தாய்மார்களுக்கும் வரும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மருந்து வகைகளைப் போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருவதால் மருத்துவத் துறையுடன் ஒருங்கிணைந்து காவல் அதிகாரிகள் செயல்பட்டு, மருந்துக் கடைகளில் தீவிர சோதனை நடத்திட வேண்டும் என்றும், பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.