திருச்சி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி காமராஜ் மன்றம் ஏ.எஸ்.ஜி. லூர்துசாமி மண்டபத்தில், மேயர் மு. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கமிஷனர் வைத்திநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டம் துவங்கியதும் மேயர் தலைமையில் அனைத்து உறுப்பினர்களும் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் மதிவாணன், துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் கவுர்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேசினார்கள். அப்போது, கோ.கு.அம்பிகாபதி (அதிமுக), “திருச்சி மாநகராட்சி கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு சொத்து வரியை உயர்த்தியது. இதனால் மாநகர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் அடுத்த மூன்றாவது மாதத்தில் மின்சார கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. தொடர்ந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை பொதுமக்களை இன்னலுக்கு உள்ளாக்குகிறது. எனவே மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை எடுக்க வேண்டும் மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
கூட்டத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அனுசியா ரவிசங்கர், அரவிந்தன் ஆகியோர் மின்கட்டண உயர்வை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து வந்திருந்தனர். அப்போது திமுக கவுன்சிலர்கள் மாமன்றத்தில் மின்சார கட்டண உயர்வை கண்டித்து பேசக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர். அப்போது மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அனுசியா, அரவிந்தன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இது குறித்து மாமன்ற அதிமுக கட்சி தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி கூறும்போது, “தற்பொழுது பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த மின் கட்டணத்தை உயர்த்தியது குறித்து மாமன்ற கூட்டத்தில் பேச முயன்ற போது திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து பேச விடாமல் தடுத்தனர். மாமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேசத்தான் கவுன்சிலர்கள் உள்ளனர். அப்படி இருக்கும் பொழுது திமுக கவுன்சிலர்கள் மக்கள் பிரச்சனையை பேசவிடாமல் தடுப்பது ஏன்? திருச்சி மாநகராட்சியில் அதிமுகவின் பேச்சு சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மின்கட்டணம் உயர்வு குறித்து சட்டசபையில் தான் பேச வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கூறுகிறார்கள். திருச்சி மாநகராட்சி எல்லை பகுதியில் வசிக்கும் மக்கள் மின் கட்டணம் கட்டவில்லையா? புதிய மின் இணைப்பு பெறவில்லையா? இவர்கள் பாதிப்பு அடையவில்லையா.?” என்று கூறினார்.