திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் பட்ஜெட்டை விளக்கியும், உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற வாய்ப்பளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் திண்டுக்கல்லில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மேயர் இளமதி, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாநகராட்சி துணை மேயர் ராஜப்பா வரவேற்று பேசினார். அதன்பின் கிழக்கு மாவட்டச் செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் பேசும் போது, ''கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் கொள்ளையடித்து கஜானாவை காலி ஆக்கிவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நமது தலைவர் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் கொள்ளையடிக்க முடியாது என்பதற்காகவே உள்ளாட்சி தேர்தலை அதிமுக அரசு நடத்தவில்லை. நாம் ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்திலேயே சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தலை நடத்தி 90% வெற்றியைப் பெற்றிருக்கிறோம். மேலும் எந்த உள்ளாட்சி அமைப்புகளிலும் நிதி இல்லை. இதை சீர்திருத்தும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் நிதி பற்றாக்குறை குறைக்கப்பட்டு இருக்கிறது. முதலமைச்சரின் சீரிய நடவடிக்கையால் உள்நாட்டு உற்பத்தி உயர்ந்துள்ளது'' என்று கூறினார்.
இதில் தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ், மாவட்ட அவைத் தலைவர் பஷீர் அகமது, துணை செயலாளர்கள் தண்டபாணி, நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.