சென்னை தலைமை செயலகத்தில் தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
அப்போது, அமைச்சர் துரைக்கண்ணு கூறியதாவது; "நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காகவே வேளாண் சட்டங்களை முதல்வர் ஆதரித்தார், அவர் விவசாயிகள் பாதிக்கப்படுவதை ஆதரிக்க மாட்டார்" என்றார்.
அதைத்தொடர்ந்து, வேளாண் சட்டங்களில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி விளக்கமளித்தார். அவர் கூறியதாவது, "ஒப்பந்த வேளாண்மை குறித்து தமிழக அரசு சட்ட முன்வடிவு கொண்டு வந்துள்ளது, அவைதான் மத்திய அரசின் சட்டத்திலும் உள்ளன. விலை உறுதி அளிப்பு பண்ணை ஒப்பந்த சட்டத்தை தமிழக அரசு 2019- ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் கொண்டு வந்தது. ஒப்பந்த வேளாண்மை முறையில் விளைப்பொருட்களுக்கான விலையை முன்கூட்டியே நிர்ணயிக்கலாம். முன்கூட்டியே ஒப்பந்தம் போட்டாலும், மார்க்கெட் விலை அதிகரித்தால், அந்த விலைக்கே பொருட்களை விற்க சட்டம் வழிவகை செய்கிறது. விருப்பம் இருந்தால் மட்டுமே ஒப்பந்த வேளாண்மை முறையில் இணையலாம்; கட்டாயம் கிடையாது. விவசாயப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார காக்கப்படும்" என்றார்.