அக்னிபத் திட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தால் இளைஞர்கள் ரோல்மாடலாக மாறுவார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''சமீபத்தில் மத்திய அரசு 'அக்னிபத்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த அக்னிபத்துடைய சாராம்சம் அதிக அளவிற்கான இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததது. எவ்வளவு இளைஞர்கள் ஆர்மியில் சேர வேண்டும் என கனவுடன் இருக்கிறார்கள். ராணுவத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என காத்திருக்கிறார்கள். அவர்கள் இந்த நாட்டினுடைய வளர்ச்சிக்காக தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்கு இந்த அக்னிபத் திட்டமானது சிறந்த பாதையாக இருக்கிறது. இந்த அக்னிபத் மூலம் நிறைய திறமைமிக்க இளைஞர்கள் கரம் நமது ராணுவத்திற்கு கிடைப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பாக இருக்கிறது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. நான்கு வருடம் முடிந்து வெளியே வரும்பொழுது 11.75 லட்சம் சேவை நிதியாக அவர்களுக்கு கிடைக்கும். சம்பளத்தை தவிர்த்து இந்த நிதி கிடைக்கும். அந்த ரூபாய்க்கு வருமான வரியும் கிடையாது. இது ஒரு நல்ல வரப்பிரசாதமான வரவேற்கத்தக்க ஒரு திட்டம். இந்த திட்டம் ஏற்கனவே பல நாடுகளில் இருந்தாலும் இப்பொழுது இந்தியாவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதனால் இளைஞர்களின் ரோல் மாடலாக மாறுவார்கள்'' என்றார்.