பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஸ்டாலினுடன் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க.வின் பொருளாளரும், அக்கட்சியின் மக்களவை குழு தலைவருமான டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆளுநருடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், ஆளுநரை சந்தித்ததற்கான நோக்கம் குறித்து பேசுகையில், "தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நிலவுகிறது. அமைச்சர்கள் மீது அளித்த ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், அதனை ஆளுநரிடம் மனுவாக அளித்தோம். 97 பக்க ஊழல் புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்துள்ளோம். முதல்வர், துணை முதல்வர் சொத்துக்களை வாங்கிக் குவித்தது குறித்து புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளோம். 2018- ஆம் ஆண்டு ஊழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளோம். அமைச்சர்கள் மீதான முதல் கட்ட ஊழல் பட்டியல்தான் ஆளுநரிடம் தரப்பட்டுள்ளது" என்றார்.