கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள வாகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (எ) செந்தாமரை(43). இவர் அப்பகுதியைச் சேர்ந்த, தனியாக இருந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியைக் கடந்த 22 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது தந்தையிடம் கூறிவிட்டு திடீரென வீட்டுக்குள் சென்று கதவை மூடிவிட்டுத் தூக்குப் போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார்.
இதனிடையே இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். அதையடுத்து நேற்று மாலை சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின் ராமநத்தம் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது ஆம்புலன்ஸை வழிமறித்த வாகையூர் கிராம மக்கள் மற்றும் இறந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் செந்திலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது; கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி - ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்த தகவல் கிடைத்ததின் பேரில் திட்டக்குடி, ராமநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தைக் கைவிட்டுக் கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.