சிவகாசியை அடுத்துள்ள ஆலமரத்துப்பட்டி ரோடு, பெரியார் காலனியைச் சேர்ந்தவர் செல்வமணிகண்டன். திருத்தங்கல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் எழுச்சிப் பாசறையின் நகர துணைச் செயலாளர் ஆவார். இவர், பிரகதி மோனிகா என்பவரைத் திருமணம் செய்து ஒரு மாதமே ஆன நிலையில், கடந்த வாரம் பிரகதி மோனிகா, ஒன்றரை பவுன் நகைக்காக, அதே ஏரியாவில் வசிக்கும் கோடீஸ்வரன் மற்றும் சேகரால், கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு கோடீஸ்வரனின் தாய் பரமேஸ்வரியும் உடந்தையாக இருந்தார். செலவுக்கு பணம் இல்லாததாலேயே, நகைப்பறிப்பில் ஈடுபட்டு, கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று காலை திருத்தங்கல் சத்யா நகரிலுள்ள, படுகொலை செய்யப்பட்ட பிரகதி மோனிகாவின் வீட்டிற்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் சென்றார். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தலித்ராஜா மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பிரகதி மோனிகா குடும்பத்தினரிடம் கே.டி.ராஜேந்திரபாலாஜி “உங்கள் மகளைக் கொலை செய்த குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. கொலையில் வேறு நபர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் கைது செய்யப்படுவர். சட்டத்தின் முன் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.” என ஆறுதல் கூறியதோடு, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் செய்தார்.