ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் ‘குறிப்பிட்ட கேள்வி கேட்கக்கூடாது’ என்று கறாராகப் பேசியது ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் ‘வைரல்’ ஆகிவரும் நிலையில், அவரிடம் பேசினோம்.
“தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துச் செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினரிடம் தொடர்ந்து நட்புணர்வோடு பழகி வருகிறேன். செய்தித்துறை அமைச்சராகவும் இருந்த நான், ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்கள் மீது, மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறேன். ஸ்ரீவில்லிபுத்தூரில், ‘சின்னம்மா.. சசிகலா.. அமமுக..’ என்று சம்பந்தம் இல்லாமல் கேள்வி எழுப்ப முயற்சித்தபோது, தேர்தலுக்கும் எனது பிரச்சாரத்துக்கும் துளியும் தொடர்பில்லாத கேள்விகளை முன்வைத்தபோது, பேட்டியாக அல்லாமல், நான் உரிமையுடன் ‘இந்தக் கேள்வியெல்லாம் வேண்டாம்..’ என்று பத்திரிகை சகோதரர்களிடம் விளையாட்டாகப் பேசியதை, எனக்குத் தெரியாமல் வீடியோ எடுத்து, பெரிதாக்கிவிட்டார்கள்.
எந்தச் சேனல் என்று நான் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு சேனல் மட்டும், என்னை எப்படியாவது ‘டென்ஷன்’ ஆக்கி, அதை இந்தத் தேர்தல் நேரத்தில், எனக்கு எதிரான அஸ்திரமாக விடவேண்டும் என்று, யாரோ தூண்டிவிட்டதற்கு ஏற்ப செயல்படுகிறது. பொது வாழ்க்கையில் உள்ளவர்களை, அதுவும் என் போன்ற அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்பதற்கு, ஊடகத்துறையினருக்கு முழு உரிமை இருக்கிறது. கேள்வி எதுவானாலும், சமுதாயத்துக்குப் பயன்படும் விதத்தில் கேட்கும்போது, நாங்களும் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கிறோம். தேவையற்ற கேள்விகளைத் தவிர்ப்பதே நல்லது.” என்று விளக்கம் அளித்தார்.
வரைமுறையற்ற தனது பேச்சால், பெரிய அரசியல் தலைவர்களை எல்லாம் ‘டென்ஷன்’ ஆக்கியவர் ராஜேந்திரபாலாஜி. அதுவே இந்தத் தேர்தல் நேரத்தில், அவருக்கு எதிரான ‘பூமராங்’ ஆகத் திரும்பியிருக்கிறது.