புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கும் அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் என 68 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், வேட்பு மனுத் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளான நேற்று வரை 20 வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் திரும்ப பெற்றனர். இதில் 6வது வார்டில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட சுயேட்சை வேட்பாளரும் தங்கள் வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் அங்கு தி.மு.க சார்பில் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்த சர்மிளாபானு போட்டியின்றி வெற்றி பெற்றார். வெற்றிச் சான்றிதழை பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்குமார் வழங்கினார். போட்டியின்றி திமுக வேட்பாளர் போட்டியின்றி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து திமுகவினர் கொண்டாடிவருகின்றனர்.
மேலும், கீரமங்கலம் பேரூராட்சியில் தி.மு.க சார்பில் 11 வேட்பாளர்களும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என தலா ஒரு வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். அதே போல அ.தி.மு.க சார்பில் 9 வேட்பாளர்களும், நாம் தமிழர் கட்சி சார்பில் 12 வேட்பாளர்களும், பா.ஜ.க.வில் 2, மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 10 பேர் என 47 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.