Skip to main content

“தூர்வாரும் பணிகளில் துளி அளவு கூட முறைகேடு நடக்க கூடாது..” கூடுதல் தலைமை செயலாளர் 

Published on 05/06/2021 | Edited on 05/06/2021

 

Additional Chief Secretary to the Government for Public Works Sandeep Saxena

 

“தூர்வாரும் பணிகளில் துளி அளவு கூட முறைகேடு நடக்கக் கூடாது, அப்படி நடந்தாலோ, நடத்தது தெரியவந்தாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை இருக்கும்” என நாகையில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கூறியிருக்கிறார். 

 

காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். அந்தவகையில், மேட்டூரில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர். கூட்டத்தை முடித்துக்கொண்டு நாகை அருகே பனங்குடி, திட்டச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்தார்.

 

ஆய்வுசெய்த இடத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியவர், "மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களான கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 589 இடங்களில் ரூ. 6,290.50 லட்சத்தில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

நாகை மாவட்டத்தில் மட்டும் 89 பணிகள் மூலம் 574.50 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ. 525.40 லட்சத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு 62 பணிகள் தொடங்கப்பட்டு, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகிறது மீதமுள்ள பணிகள் விரைவில் துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

தூர்வாரும் பணியில் துளி அளவு கூட முறைகேடு நடக்காமல் இருக்க உழவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவாகவும் அதே நேரத்தில் தரமானதாகவும் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்