மக்கள் குறைதீர் கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் நடிகர் சரவணன் மனு அளிக்க வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார். இதில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் சரவணன் தா.மோ.அன்பரசனிடம் புகார் மனுவை கொடுத்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சரவணன், ''2014 ஆம் ஆண்டு லேக் வியூ அபார்ட்மெண்ட் செண்பகராமன் என்பவரிடம் இருந்து இரண்டு பிளாட் வாங்கினேன். இதை வாங்கிக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தவர் ராமமூர்த்தி என்ற புரோக்கர். அபார்ட்மெண்டுக்கு சொந்தமான கார் பார்க்கிங்கில் ராமமூர்த்தி கடையை கட்டி விட்டார். அதற்கு இபி வாங்கி விட்டேன் என்று சொல்கிறார். வரி கட்டி விட்டேன் என்று சொல்கிறார். அந்த கார் பார்க்கிங் என்னுடையது. ஆனால் அவருடையதாக ஏமாற்றுகிறார். நான் முதல் மனைவியிடம் பேசாமல் பிரிந்து இருந்ததை பயன்படுத்தி ராமமூர்த்தி இடத்தை ஆக்கிரமித்துள்ளார். அவரது மனைவி ஜெயமணி மற்றும் பத்திரப்பதிவு செய்து கொடுத்த இளவரசன் ஆகியோர் தன்னை ஏமாற்றியுள்ளனர்'' என்றார்.