திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் (அக்டோபர் 29) மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடுக்காட்டுப்பட்டியில் சுஜித் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த வந்த நடிகர் மயில்சாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, ஒரு குழந்தையை பெற்றால் மட்டும் போதாது, அந்த குழந்தை ஐந்து வயது ஆகும் வரை அதாவது விபரம் தெரிந்து தானாகவே ஒரு வேலையை செய்யும் வரை பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக தாய்மார்கள் குழந்தையின் மீது ஒரு கண் வைத்து கொண்டே இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அரசாங்கத்தை மட்டுமே குறை சொல்லக்கூடாது என்றும் கூறினார். அதே போல் பெற்றோர்களும் குழந்தையை வளர்க்கும் போது பொறுப்புணர்வுடன் வளர்க்க வேண்டும் என்று கூறினார். அதோடு இனிமேலாவது இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் இருக்க பொது மக்களும், அரசாங்கமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.