Skip to main content

“தமிழ்நாட்டில் 24 சதவீதம் உள்ள மரப்பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை” - அமைச்சர் ராமச்சந்திரன்

Published on 10/09/2022 | Edited on 10/09/2022

 

"Action to increase the timber area in Tamil Nadu from 24 percent to 33 percent" - Minister Ramachandran

 

தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் திருச்சி மாவட்டம், சிறுகனூர் அடுத்துள்ள எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தை பார்வையிட்டார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் எட்டு யானைகளின் பராமரிப்பு குறித்து வன அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அங்கு செயல்பாட்டிற்கு வராமல் உள்ள வன உயிரியல் பூங்காவையும் பார்வையிட்டார். அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தார். 

 

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “மத்திய அரசு வன உயிரியல் பூங்காக்களுக்கு எந்த முக்கியத்துவமும் வழங்குவதில்லை. திருச்சியில் வன உயிரியல் பூங்கா அமைக்க 2009ல் பணிகள் தொடங்கப்பட்டது. அங்கு கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 கிலோ மீட்டருக்கு ரூ.85 லட்சம் செலவில் சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளது. இதனை மேலும் மேம்படுத்த ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் மத்திய விலங்கு காட்சியக ஆணையத்திடம் நிதி கேட்டுள்ளோம். அந்த நிதி வந்த பின்பு உயிரியல் பூங்கா மேம்படுத்தப்பட்டு விலங்குகள் வாங்கப்படும். அந்த பணி விரைவாக நடைபெறும்.

 

நீலகிரி மாவட்டத்தில் முதுமலையில் 28 யானைகளும், கோயம்புத்தூரில் 26 யானைகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தனியார் வளர்த்த யானைகள் அவர்களால் பராமரிக்க முடியாத நிலையில் அந்த யானைகள் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மறுவாழ்வு மையத்தில் விடப்படுகிறது. அதன்படி தற்போது 8 யானைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

 

தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மக்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் மரங்களை அதிக அளவில் நட வேண்டும் என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மரப்பரப்பு 24 சதவீதமாக உள்ளது. அதனை அடுத்த பத்தாண்டில் 33 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் காரணமாக இந்தாண்டு இரண்டரை கோடி மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டிலிருந்து மாவட்டத்திற்கு ஒரு கோடி மரக்கன்றுகள் நடவும் திட்டமிட்டுள்ளோம்.

 

திருச்சி மாவட்டம், சோபனாபுரத்திலிருந்து பச்சைமலை வரை 25 கி.மீட்டருக்கு சாலை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்காக மலைவாழ் மக்களுக்கான மேம்பாட்டு துறை, நெடுஞ்சாலை துறைக்கு கோப்புகள் அனுப்பி உள்ளோம். விரைவாக அங்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வன உயிரினங்கள் விளைப்பயிர்களை நாசமாக்குவதை தடுப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்பு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்