புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வடக்கு மற்றும் செரியலூர் ஆகிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். முகாமில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் டெய்சி குமார், சுகாதார துணை இயக்குநர் விஜயகுமார் மற்றும் பலதுறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் மெய்யநாதன், கீரமங்கலம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களுக்குப் பொன்னாடைகள் வழங்கி கௌரவப்படுத்தி, மக்களைக் காக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் உங்களுக்கு நன்றிகள் என்று கூறினார். அப்போது தூய்மைப் பணியாளர்கள் சாதாரண முககவசம் அணிந்திருப்பதைப் பார்த்த மெய்யநாதன், அவர் அருகில் நின்றிருந்த பேரூராட்சி செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், "தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்குத் தரமான முககவசம் மற்றும் கிருமிநாசினி வழங்க வேண்டும். அடுத்த முறை பார்க்கும் போது தரமான மாஸ்க் இல்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கைவிடுத்தார்.
தொடர்ந்து செரியலூரில் மருத்துவ முகாமை தொடங்கி வைக்கச் சென்றவர் முதலில் தூய்மைக் காவலர்களைக் கௌரவித்து நன்றி கூறினார். அவர்களுக்கும் தரமான மாஸ்க் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து மரக்கன்று நட்டு முகாமை தொடங்கி வைத்தவர், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.