திருச்சி மாநகரில் கடந்த மே மாதம் 19-ந் தேதி பிரணவ் ஜுவல்லரி ஊழியர் மார்ட்டின் ஜெயராஜ் என்பவர் சென்னையிலிருந்து விற்பனைக்காக சுமார் 11 கிலோ தங்க நகைகளை வாங்கிவிட்டு திருச்சி நோக்கிப் புறப்பட்டு வந்தார். ஆனால், அவர் திரும்ப கடைக்கு வரவில்லை என்று நகைக்கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீசார் புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, கார் டிரைவரான திருவானைக்காவல் மாம்பழச்சாலை சண்முகம் மகன் பிரசாந்த், அவரது நண்பர் கீழக்குறிச்சியை சேர்ந்த பொன்னர் மகன் பிரசாந்த் ஆகியோர் மார்டின் ஜெயராஜ் உடன் திருச்சிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அந்த சமயம் மார்டின் ஜெயராஜ் மீதுள்ள முன்விரோதம் காரணமாகவும், கடன் பிரச்சனை காரணமாகவும், தங்க நகைகளைத் திருட வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் கார் டிரைவர் பிரசாந்த், தனது கூட்டாளிகளை வேறு காரில் வரச்செய்துள்ளார். தொழுதூர் வேப்பூர் இடையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மார்டின் ஜெயராஜை கொலை செய்தனர். பின்னர் உடலை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அழகியமணவாளம் கிராமத்தில் உள்ள ஒரு திடலில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்தது புலன்விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் எதிரிகள் திருடிச்சென்று மறைத்து வைத்திருந்த ரூ.74 லட்சம் மதிப்புள்ள 11 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவ்வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தங்க நகைகளுக்காகக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் கார் டிரைவர் பிரசாந்த்(26), நண்பர் கீழக்குறிச்சி பிரசாந்த்(26), அழகியமணவாளத்தை சேர்ந்த பிரவீன்ராஜ்(20) மற்றும் அரவிந்த்(23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் எண்ணம் கொண்டுள்ளவர்கள் என்பதாலும், பொதுமக்களுக்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவார்கள் என்பதாலும் அவர்களை ஓராண்டு ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். இந்த உத்தரவை உறையூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருணுக்கு பரிந்துரை செய்தார். அதை அவர் ஏற்று, குண்டர் சட்டத்தின் 4 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.