அரியலூர் மாவட்டத்தில் அப்துல்கலாமின் நினைவுநாளையொட்டி மாணவர்களுக்கு மண்பானை, மண்சட்டி, மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
அரியலூர் மாவட்டம், டி.பழூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் கிராமத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலாமின் உருவப்படத்திற்கு கிராம மக்கள் இளைஞர்கள் குழந்தைகள் என பலதரப்பட்ட மக்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவிந்தபுத்தூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா கதிரேசன் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் பச்சை மனிதர் தங்க சண்முக சுந்தரம் கலந்து கொண்டு பாரம்பரிய உணவு நோயெதிர்ப்பு ஆற்றல் சக்தியை பெருக்கவல்ல மூலிகை சூப், எலுமிச்சை சாறு, சிறுதானியங்கள், மண்சட்டி பயன்பாடு மண்பானை பயன்பாடுகள் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அறச்செல்வி, கோவிந்தபுத்தூர் சிவன் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் மாணவர்களுக்கு மண்பானை, மண்சட்டி பரிசுகளை வழங்கி சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை எனவும் அறிவுறுத்தினார். மேலும் நல்லோர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் திருப்பதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒருங்கிணைத்தனர் அக்னி சிறகுகள் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள். நிகழ்ச்சியின் முடிவில் அக்னி சிறகுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நேரு நன்றி கூறினார்.