திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில், எட்டாவது முறையாக மூளை சாவு அடைந்தவர் உடலில் இருந்து சிறுநீரக உறுப்பு எடுப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை தாலுகா, மரத்தம்பட்டி ஊரைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க நபர் சாலை விபத்து ஏற்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த வந்த நிலையில் உயிரிழந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது என்பதை உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனை உணர்ந்த இறந்தவரின் மனைவி அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார். மேலும் அவருடைய உறுப்புகளான இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர்.
இதையடுத்து டிரான்ஸ்டன் வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின் படி, தகுதியான நபருக்கு தானமாக பெறப்பட்ட உறுப்புகளில், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தொடர்ச்சியாக இரத்தசுத்திகரிப்பு சிகிச்சை பெற்று வந்த 24 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு ஒரு சிறுநீரகம், இம்மருத்துவமனை முதல்வர் நேரு தலைமையிலான மருத்துவ குழு, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக, வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார்.
இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 18-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் தானமாக பெறப்பட்ட உறுப்புகளில், இதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கும், கல்லீரல் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருபவருக்கும், கண்விழிகள் இரண்டும் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது.