
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அண்ணாசிலை அருகில் உள்ளது வட்டாட்சியர் அலுவலகம் எப்பவும் பரபரப்பாக காணப்படும் இடம்.
இன்று ஒருவர் வீட்டில் சமையலுக்கான எரிவாயு சிலிண்டர். கேஸ் வெல்டிங் குழாய்களுடன் வந்து நின்றார். பிறகு வட்டாட்சியர் அலுவலக ஜன்னல் வழியாக கணினி அறை பக்கம் எரிவாயுவை திறந்து கேஸ் வெல்டிங் குழாய் மூலம் தீயை பரவ விட்டார். இதனைப் பார்த்து அலுவலக ஊழியர்கள் அலறினார்கள். அவசரமாக எழுந்து ஓடினார்கள். சிலர் மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் தீ பற்ற வைத்தவர் ஓட நினைக்கவில்லை. மாறாக எனக்கு நீதி வேண்டும். இல்லை என்றால் இங்கே தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கதறி அழுதார்.

சம்பவம் கேள்விப்பட்டு போலீசாரும் வந்தனர். தீ பற்ற வைத்த நபரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது அவர் கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்.. என் பெயர் அன்புராஜ். அப்பா பெயர் நடேசன். அறந்தாங்கி வட்டத்தில் உள்ள திருநாளுர் தெற்கு கிராமம். 2010ல எங்க அப்பா இறந்துட்டார். எனக்கு கல்யாணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். நான் சென்னையில் கேஸ் நிறுவனத்தில் வேலை செய்றேன்.
எங்க அப்பாவின் பூர்வீக சொத்தை என் பெயருக்கு மாற்றிக் கொடுங்கன்னு 2010, 2013, 2014, இப்படி பல முறை மனு கொடுத்தேன். இதுக்காக சென்னையில் இருந்து செலவு செய்து ஊருக்கு வரவேண்டியுள்ளது. பல முறை மனு கொடுத்தும் எந்த பலனும் கிடைக்கல. இப்படி பட்டாவுக்காக ஒவ்வொரு முறை ஊருக்கு வரும் போதும் என் வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு செலவாகுதுன்னு கேட்பார்கள். இப்பவும் பட்டாவுக்காக ஊருக்கு கிளம்பும் போது..

என் உறவினர்கள் பட்டா வாங்கிட்டு வா இல்லன்னா தாலுகா ஆபிஸ்லயே தூக்கு போட்டு சாவுன்னு சொல்ற அளவுக்கு போயிட்டாங்க. நானும் எத்தனை வருசம் தான் அலையுறது. நேர்மையாக பட்டா கேட்டால் கிடைக்கல. அதனால் தான் விரக்த்தியில் இப்படி கேஸ் சிலிண்டருடன் வந்தேன். என் குடும்பம் இன்னைக்கு நடுத்தெருவுல நிக்குது. ஆனா அதிகாரிகள் அமைதிய இருக்காங்க என்று கண்ணீரோடு சொல்லி முடித்தார்.
இறுதியில் அவருக்கு பட்டா கிடைத்ததா என்றால் இல்லை.. அலுவலகத்தை எரிக்க முயன்றார் என்று வழக்கு தான் கிடைத்துள்ளது. இப்படி எத்தனை பேர் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்களோ.?