கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் ராஜ் - விஜயலட்சுமி தம்பதியினர். இவர்கள் விருத்தாசலத்தில் அச்சகம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்கள் நேற்று மதியம் அரியலூர் மாவட்டம் அருகேயுள்ள மீன்சுருட்டியில் உள்ள தனது உறவினர் கட்டியுள்ள புதுவீட்டின் புதுமனை புகுவிழாவிற்காக குடும்பத்துடன் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடித்துவிட்டு இன்று தமது சொந்த ஊரான பரவளூர் கிராமத்திற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டிற்குள் சென்றபோது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டும், வீட்டிற்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டும், துணிகள் சிதறிக் கிடப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் செய்வது தெரியாமல் தவித்த அக்குடும்பத்தினர் விருத்தாசலம் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த விருத்தாசலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகை, 50,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் அரை கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயின் உதவியுடனும், அக்கிராமத்தின் அருகே உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு பகலாக ஆள் நடமாட்டம் உள்ள கிராமத்தில் மர்ம நபர்கள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அக்கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.