நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும்போது நிலைதடுமாறி கிணற்றுக்குள் விழுந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது பிலிப்பாகுட்டை. அந்தப் பகுதியில் அரசு பள்ளியில் பத்தாவது படித்து வரும் மாணவர்கள் உட்பட மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது நிலைதடுமாறி விவசாய கிணற்றுக்குள் உள்ளே வாகனத்துடன் விழுந்தனர். அவர்களை காப்பாற்ற மாணவர்கள் சிலர் கிணற்றில் இறங்கிய நிலையில் அனைவரும் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் இரண்டு மாணவர்களை உயிருடன் மீட்டனர். நிதிஷ்குமார், அபினேஷ் ஆகிய இரண்டு மாணவர்கள் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இருப்பினும் பலமணிநேரப் போராட்டத்திற்கு பின் நான்கு பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணற்றில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், விபத்தில் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும்” என அறிவித்துள்ளார்.