சேலத்தில் மோட்டார் சைக்கிளை அபாயகரமாக ஓட்டிச்சென்றதைக் கண்டித்த காவலரைச் சரமாரியாக தாக்கியதாக திமுக பெண் கவுன்சிலரின் மகன் உள்பட 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி காவல்நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் அசோக் (30). இவர் ரோந்து வாகன ஓட்டுநராக உள்ளார். அக். 25ம் தேதி விடுப்பில் இருந்தார். அன்று சாதாரண உடையில் இருந்த அவர், மோட்டார் சைக்கிளில் சின்னத்திருப்பதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வேகமாக அவர் மீது மோதுவது போல் சென்றனர். இதைப்பார்த்து திடுக்கிட்ட காவலர் அசோக் அவர்களைக் கண்டித்தார். இதனால் அவருக்கும் மோட்டார் சைக்களில் வந்த கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அந்தக் கும்பல் காவலரைச் சரமாரியாக தாக்கினர்.
தான் காவலர் என்று சொன்னபோதும் அந்த கும்பல் கேட்காமல், விடாமல் அவரைத் தாக்கியது. இதைப்பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். கன்னங்குறிச்சி காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று காவலரைத் தாக்கிய கும்பலைப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் 5 பேரும் தாக்கியதில் காவலர் அசோக்கின் கை எலும்பு முறிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், ரிகான்பாஷா, அஸ்லாம் அலி, ரிஸ்வான் என்பது தெரியவந்தது. அவர்கள் நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு இளைஞர் தப்பி ஓடிவிட்டார். அவரைத் தேடி வருகின்றனர்.
கைதான நால்வரில் ஒருவரான அப்துல் ரஹ்மான் சேலம் மாநகராட்சி 53வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் ஷாதாஜ் என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.