டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம்!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு சின்னம் வழங்குவதில் இழுபறி இருந்தது. பணப்பட்டுவாடா தொடர்பாக ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தை மீண்டும் வழங்கவேண்டும் என டிடிவி தினகரன் கோரியிருந்தார்.
ஆனால், அவருக்கு தொப்பி சின்னம் வழங்கக்கூடாது என அதிமுக தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மூன்று கட்சிகள் ஏற்கெனவே தொப்பி சின்னம் கோரியிருந்ததால், தினகரனுக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்கமுடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், நமது கொங்கு முன்னேற்ற கழகம் என்ற கட்சியைச் சேர்ந்த ரமேஷ் என்ற வேட்பாளருக்கு தொப்பி சின்னத்தை ஒதுக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு குலுக்கல் முறையில் பிரஷர் குக்கர் சின்னம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், துரோகிகளின் பிரஷரை அதிகரித்து தோற்கடிப்பதற்காகவே பிரஷர் குக்கர் சின்னத்தை கேட்டு வாங்கியிருக்கிறோம். இனி தேர்தல் பணிகளில் ஈடுபடப் போகிறோம் என தெரிவித்தார்.
படங்கள்: குமரேஷ்