![35 students in Trichy Government Medical College!](http://image.nakkheeran.in/cdn/farfuture/zTVhTvc6u1kL_fS0kx_V9BXNujP86xGb5nuaP04bNw0/1644916495/sites/default/files/inline-images/th-1_2751.jpg)
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் கடந்த 24-ம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், 27-ம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், 28-ம் தேதி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெற்றது. அத்துடன் 30-ம் தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் வழியே நடைபெற தொடங்கியது.
இந்நிலையில் திருச்சி பெரிய மிளகு பாறையில் அமைந்துள்ள கி.ஆ.பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கியது. நேற்று 35 மாணவர் முதல் நாள் வகுப்பில் பங்கேற்றுள்ளனர். மருத்துவ முதலாம் ஆண்டு வகுப்பில் தொடக்க செய்முறை மற்றும் பருவ பாடங்கள் பயிற்றுவிக்கபட்டன. இதனை தொடந்து முதலாம் ஆண்டு மாணவர்கள் அச்சபடாமல் இருப்பதற்கு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா, துணை முதல்வர் மற்றும் உடலியல் துறைத் தலைவர் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.
![35 students in Trichy Government Medical College!](http://image.nakkheeran.in/cdn/farfuture/vZm8LILnTq9L71ntZmpKClDWCnGdNDF9csufSJp8Q2g/1644916512/sites/default/files/inline-images/th-2_749.jpg)
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் வனிதா, “திருச்சி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டுள்ளது. தற்போது வரை 35 மாணவர்கள் இணைந்துள்ளனர். நாளை மறுநாள் வரை இளைநிலை சேர்க்கை நடைபெறுகிறது. கல்லூரியில் 150 மாணவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் 10 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். மாற்று திறனாளிகள் இட ஒதுக்கீட்டில் 1 மாணவர் தேர்வாகி உள்ளார். மாணவர்களுக்கு கரோனா விதிமுறை படி வகுப்புகள் துவங்கி உள்ளது” என்றார்.