
கடலூர் அருகே உள்ள எம். புத்தூரைச் சேர்ந்தவர் நேரு(60). அதிமுக கிளை கழகசெயலாளர் இருந்து வந்த இவர் இன்று (ஏப்.21)காலை அவரது முந்திரி தோப்பில், முந்திரிக் கொட்டைகள் பொறுக்குவதற்காக நாகிய நத்தம் பகுதியைச் சேர்ந்த சரண்யா (25), கல்பனா (25), ஆகியோரை அவரது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ராமாபுரம் அருகே உள்ள விழுப்புரம்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக பைக் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரண்யா, கல்பனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நேருவை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.