முதல்வர் மு.க. ஸ்டாலின், கடந்த மாதம் கிருஷ்ணகிரியில் துவக்கிவைத்த 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம், பொது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.
நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்த நோய், இதய நோய், டயாலிசிஸ் சிகிச்சை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட கிராமப்புற ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை அதிகம். கரோனா நெருக்கடிகள் மற்றும் கட்டுப்பாடுகளால் மருத்துவமனைக்கு மக்கள் நேரில் வர முடியாத சூழலை அறிந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'மக்களைத் தேடி மருத்துவம்' பற்றி முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனடியாக அனுமதி தந்தார் முதல்வர். 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம் உடனடியாக துவக்கப்பட்டது.
தொற்று நோய்களைத் தடுக்கும் வகையிலும், நீண்ட வருடங்களாக உள்ள நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும் இத்திட்டம் துவக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவருகிறது. சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட 26 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், 1,172 துணை சுகாதார மையங்கள், 189 ஆரம்ப சுகாதார மையங்கள், 50 சமுதாய நல வாழ்வு மையங்கள் என 1,400க்கும் மேற்பட்ட இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதன் மூலம் மக்களை அவர்களின் வாழ்விடத்திற்கே சென்று பரிசோதித்து தேவையான சிகிச்சைகளையும், மருத்து மாத்திரைகளையும் கொடுத்துவருகிறார்கள் மருத்துவர்கள்.
முதல்வரால் துவக்கப்பட்ட 'மக்களைத் தேடி மருத்துவம்' எனும் இத்திட்டத்தின் மூலம் இதுவரையில், 3,13,085 பேர் பயன் பெற்றுள்ளனர். மக்கள் நல்வாழ்வுத்துறையினர், 'மக்களைத் தேடி மருத்துவ' திட்டத்தின் தினசரி பயனாளிகளை முறையாக தொகுத்துவருகின்றனர். இத்திட்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றிருப்பதில் உற்சாகமாக இருக்கிறது தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை.