சாத்தனூர் அணை நிரம்பி அதிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் பெண்ணையாறு வழியாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைக் கடந்து கடலூர் அருகே கடலில் கலக்கிறது.
இந்த ஆறு விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து கரைப் பகுதிகளில் உள்ள 200 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்களை வாழ வைத்துவருகிறது. இப்படி நீண்ட தூரம் பயணிக்கும் பெண்ணையாற்றில் ஆங்கிலேயர் காலத்தில் திருக்கோவிலூர் அருகே ஒரு தடுப்பணை மட்டும் கட்டப்பட்டது. இதன் வடபகுதியில் உருவாக்கப்பட்ட வாய்க்கால் மூலம் சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களும், அதேபோன்று தென் கரையில் இருந்து வெட்டப்பட்ட வாய்க்கால் மூலம் சித்தலிங்கமடம் வழியாகப் பயணம் செய்து, சுமார் 15 கிராம விவசாயிகளும் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட எல்லையில் பெண்ணை ஆற்றில் சில இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று பல்வேறு கிராம மக்களும் விவசாயிகளும் கோரிக்கை வைத்து, அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை நடத்திவந்தனர். இதன் பயனாக விழுப்புரம் மாவட்ட எல்லையிலுள்ள தாளவனூர் -கடலூர் மாவட்ட எல்லையிலுள்ள ஏனாதிமங்கலம் ஆகிய இரு ஊர்களுக்கிடையே கடந்த 2018ஆம் ஆண்டு தமிழக அரசின் பொதுப் பணித்துறையால் செயல்படும் நீர்வள ஆதார அமைப்பு மூலம் 25 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் ஒரு தடுப்பணை கட்டப்பட்டது.
இதன் நீளம் 400 மீட்டர், உயரம் 3 மீட்டர். இந்தத் தடுப்பணை பணிகள் ஒரு ஆண்டிலேயே கட்டிமுடிக்கப்பட்டு மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தால் 2019 ஆம் ஆண்டு திறப்புவிழா செய்யப்பட்டது. இந்த தடுப்பணை மூலம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு, இருகரை பகுதிகளிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து. குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று திட்டமிட்டு கட்டப்பட்டது. மேலும் இப்பகுதியில் இருந்து இரு பகுதிகளிலும் பல்வேறு கிராமங்களுக்கு ஆழ்குழாய் மூலம் கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்பட்டு வருகிறது. இவற்றுக்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் என்று அந்த நம்பிக்கையோடும் மிகுந்த எதிர்பார்ப்போடு கட்டப்பட்டது இந்தத் தடுப்பணை.
கட்டி திறக்கப்பட்டதும் பொதுமக்கள் விவசாயிகள் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் எனப் பலரும் தடுப்பணை கட்டப்பட்டதை வரவேற்று சந்தோஷப்பட்டனர். ஆனால், சமீபத்தில் பெய்த மழையால் பெண்ணை ஆறு பெருக்கெடுத்து ஓடி வந்தது. இந்தத் தடுப்பு அணையில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் தேங்கி நின்றது. இதனைக் கண்டு சந்தோசமடைந்த பொதுமக்கள் சுற்றுலா செல்வது போல அந்த தடுப்பணையில் தண்ணீர் தேங்கி இருக்கும் காட்சியைப் பார்ப்பதற்காகச் சென்று வந்தனர். திடீரென்று நேற்று இந்த அணையின் தென்பகுதி கரையின் பக்கச் சுவரில் பெரும்துளை ஏற்பட்டு அணையில் தேங்கி இருந்த தண்ணீர் முழுவதும் அதன் வழியாக வெளியேறியது. இதனால் பக்கச் சுவர் உள்வாங்கி உள்ளது. அணையில் தேக்கப்பட்ட தண்ணீர் முழுவதும் வெளியேறியதால் இப்பகுதி மக்களும் விவசாயிகளும் வேதனையில் உள்ளனர்.
இனிமேல் மழை பெய்து தண்ணீர் வருவதற்கு சாத்தியம் இல்லை. தண்ணீர் தேங்குவதற்கு வாய்ப்பு இல்லை. தேங்கிய தண்ணீர் வெளியேறிவிட்டது. 25 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில் பக்கச் சுவரில் எப்படி ஓட்டை விழுந்தது. தரமில்லாமல் கட்டப்பட்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று வேதனை தெரிவிக்கின்றார்கள் இப்பகுதி விவசாயிகள்.
இதைக் கேள்விப்பட்ட திமுகவின் முன்னாள் அமைச்சரும் திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ-வுமான பொன்முடி, கட்சியின் மாவட்டச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் அந்தப் தடுப்பணை உள்வாங்கி தண்ணீர் வெளியேறிய இடத்தைப் பார்வையிடச் சென்றனர். அதன் நிலைமையைப் பார்த்த அவர்கள், "இந்த அணை\யைக் கட்டுவதற்காக 25 கோடியை, ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்க காரணமாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 கோடியில் அணை தரமாகக் கட்டப்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தரமற்ற அணை கட்டிய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி தடுப்பணை அருகிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.