சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பால் குற்றங்களும் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் வகையில் தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகம் புதிதாக உருவாக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள காவல் மாவட்டங்கள் மறு சீரமைக்கப்பட்டன.
அந்தவகையில் சென்னை கோயம்பேடு காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் கீழ் மூன்று உதவி ஆணையர் சரகங்கள் உருவாக்கப்பட்டு கோயம்பேடு, மதுரவாயல், வளசரவாக்கம், ராமாபுரம், வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம், சி.எம்.பி.டி, விருகம்பாக்கம், விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகிய 8 காவல் நிலையங்கள் செயல்படும் வருகிறது.
பிற்பகல் 12 மணிமுதல் இரவு 10 மணிவரையில் தான் அரசு மதுபானக்கடை செயல்பட வேண்டும். ஆனால், விதியினை மீறி வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மதுபானக்கடை, அதே சாலையில் விருகம்பாகம் பகுதி, ஸ்ரீதேவி குப்பம் சாலையின் மகளிர் காவல் நிலையத்தின் பக்கவாட்டில் உள்ளிட்ட இடங்களில் 24 மணி நேரமும் பார்களில் மது விற்பனை நடந்துவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதே சாலையில் சற்று தொலைவு சென்றால் மதுரவாயில், கோயம்பேடு மார்க்கெட் பக்கவாட்டில் இருக்கும் மதுக்கடையிலும் 24 மணி நேரமும் விற்பனை செய்து வருவதால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியூர்களில் இருந்து வருகின்ற மக்களுக்கு அச்சத்தை உண்டாக்கும் நிலையில் இருப்பதாகவும், மேலும் வளசரவாக்கத்தில் இரவு நேரங்களில் பெண்கள் வேலைக்கு சென்று வீடு திரும்பும் பாதையிலே உள்ளதாலும், காவல்துறை கண்டும் காணாமல் செல்வதாலும் மேலும் அச்சமாக உள்ளதாக அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து நாம் நேரில் சென்று பார்த்தபோது, பொதுமக்கள் சொன்னதை போன்றே அந்தப் பகுதியில் அரசு அனுமதித்த நேரத்தை மீறி மது விற்பனை நடைபெற்றது. காவல்துறை வாகனம் இரவு அந்த வழியாக கண்டும் காணாமலும் சென்றது. உடனே உள்ளே சென்று மது விற்பனை கூடத்தை புகைப்படம் எடுத்துக்கொண்டு, விற்பனையாளர்களிடம் பேச்சு கொடுத்தோம். என்ன இரவில் இப்படி மது விற்பனை செய்வதால் காவல்துறை பிடிக்காதா என்றதற்கு அது எப்படி பிடிக்கும் நாங்கள்தான் ஏ.சிக்கும், இன்ஸ்பெக்டருக்கும், மாமூல் கொடுக்கிறோமே என பேசினார்.
அதே போல, அங்கு இயங்கும். அரசு மதுபானக்கடைகளில் பணிபுரியும் சூப்பரவைசர் உடந்தையோடு இவர்கள் பணம் இல்லாமலே மது பானங்களை பெற்று பிறகு மறுநாள் அரசு கணக்குகளை முடிக்கின்றனர். இவர்களோடு வளசரவாக்கம் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸ் மற்றும் ஏ.சி கௌதம் ஆகியோருக்கு கட்சிதமாக கவனிப்புகள் இருப்பதாலே கண்டும் காணாமல் சென்றுவிடுவதாக புகார்கள் எழுந்தன.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குருஸிடம் கேட்ட போது, “அப்படியா, என்னிடமும் மக்கள் சொல்லிருந்தாக, நான் இப்போ லீவில் இருக்கிறேன். இனிமேல் நடக்காமல் பாத்துக்கிறோம்” என்றார். அதே போல ஏ.சி கௌதம் அவர்களிடம் விசாரித்த போது, “அப்படி ஏதுவும் இல்லை, அது போன்று நடந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம்” என்றார்.