சேலம் மாவட்டம், ஓமலூரில் அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று (22/09/2021) மாலை கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "2024- ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது. ஆயிரம் பேர் அமரும் வகையில் நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வருவதால் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரலாம். எம்.பி.க்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பிருப்பதால், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். எந்த கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடந்தது என்பது குறித்து தெளிவாக இல்லை. வங்கிக் கடனில் முறைகேடு நடந்திருந்தால் நடவடிக்கை தேவை.
'நீட்' தேர்வு ரத்துச் செய்யப்படும் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை. 'நீட்' தேர்வு விலக்குக்காக அ.தி.மு.க. கொண்டு வந்த அதே தீர்மானத்தையே தி.மு.க.வும் கொண்டு வந்துள்ளது. அ.தி.மு.க. கொண்டு வந்த 7.5% இட ஒதுக்கீடு சிறப்பான திட்டம் என்பதால் அதை தி.மு.க. அரசு தொடர்கிறது" எனத் தெரிவித்தார்.