2,315 முதுகலை மற்றும் 58 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணி நியமனம் - அமைச்சர் செங்கோட்டையன்
இன்று ஆசிரியர் பணிநியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்குப் பின்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அதில்,
ஆசிரியர் பணிநியமன ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களிலே சென்று பணியாற்ற இருக்கிறார்கள். வெளிப்படைத்தன்மையுடன் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே எந்தமாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஆசிரியர் தகுதித்தேர்வானது ஆன்லைன் மூலமாக நடைபெற்றுள்ளது. அதே நேரத்தில் அவர்களுக்கு வழங்கப்படுகிற பணி நியமன ஆணையானது, எந்தவிதமான காலதாமதாமும் இன்றி 40 நாட்களுக்குள்ளே வழங்கப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் இந்த ஆணையை வழங்கவேண்டுமென விரும்பினோம். இருந்தாலும்கூட, 4% முதுகலை ஆசிரியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில்தான் இந்த காலதாமதம் ஏற்பட்டது. இல்லையென்றால் 30 நாட்களுக்குள் இந்த ஆணையை வழங்கி நம்மால் சாதனை படைத்திருக்க முடியும். இந்த நிகழ்வில் 2,315 முதுகலை மற்றும் 58 சிறப்பு ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பணிநியமனம் பெற்றவர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்வார்கள் என நம்புகிறோம்.