அ.தி.மு.கவில் வெற்றி பெற்று அ.ம.மு.கவில் இணைந்துள்ள 18 எம்.எல்.க்களும் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் கொடுத்த மனுவுக்காக கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக சபாநாயகரால் நீக்கம் செய்யப்பட்டனர். அது தொடர்பான வழக்கில் இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் சபாநாயகர் உத்தரவு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக பலரும் கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில்.. அண்ணா திராவிடர் கழகம் பொதுச் செயலாளர் திவாகரன் மன்னார்குடியில் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் பொழுது
சபாநாயகர் எடுத்த ஒருதலைபட்சமான முடிவை நீதிமன்றம் உத்தரவாக சொல்லி இருக்கிறது. கட்சி கொறடா உத்தரவையும் மீறி ஒ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் கட்சி கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்து வாக்களித்தார்கள். இன்று அவர்கள் ஆட்சி பொறுப்பில் இருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்று மனு கொடுத்தவர்களை நீக்கி இருப்பது ஒருதலைப்பட்சமானது தான்.
இப்போதைய சூழ்நிலையில் 20 தொகுதியிலும் இடைத் தேர்தல் வந்தால் ஒ.பி.எஸ். – எடப்பாடி தலைமையில் இயங்கும் அ.தி.மு.க ஒரு இடம் கூட பிடிக்க முடியாது. மாயவித்தைகளை காட்டி எம்.எல்.ஏக்களை இழுத்து சென்றார் தினகரன். அவர்களிடம் அனுசரித்து பேசி இருந்தால் பிரச்சனை தீர்வுக்கு வந்திருக்கும். அதை செய்யாததால் அ.தி.மு.க கோட்டையில சிதைவு ஏற்பட்டுள்ளது.
தீர்ப்பை வரவேற்று அ.தி.மு.க தொண்டர்கள் புரியாமல் வெடிவெடித்து கொண்டாடி வருகிறார்க்ள. அதைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வருகிறது. இந்த தீர்ப்பு அரசுக்கு ஊதிய சங்கு என்பது அவர்களுக்கு தெரியவில்லை. அ.தி.மு.கவுக்கு இது கடுமையான காலகட்டமாக உள்ளது.
பொதுச்செயலாளரை சிறைக்கு அனுப்பிய மகா உத்தமர் தினகரன் அவர் எல்லாம் சொல்வார். ஆனால் அவரை நம்பி 18 அப்பாவிகள் பலிகடாக்களாகிவிட்டார்கள். ஒ.பி.எஸ், அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னிடம் பேசினார்கள் என்பதை வெளியே சொல்வது நாகரீகம் இல்லை. தற்போது அ.தி.மு.க, அ.ம.முக.வுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்புகள் இல்லை. எதிர்கட்சிகளுக்குதான் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
18 எம்.எல்.ஏக்களும் மேல்முறையீடு என்று போகாமல் தேர்தலுக்கு தயாராவதுதான் சரியானதாக இருக்கும். இந்த பிரச்சனையை உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு காலங்கடத்துவதைவிட மக்கள் மேல வைத்துள்ளது தினகரன் டிராமா கூட்டம். ஆறுகளில் தண்ணீர் அதிகமாக வெள்ளப் பெருக்கு வரப்போகிறது. அவற்றை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாராக இல்லை. ஆனால் மணல் அள்ளுபவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ளது என்றார்.