கடலூர் மாவட்ட சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டம், டாக்டர் முத்துலட்சுமி நினைவு கலப்பு திருமண திட்டம், ஈ.வெ.ரா - மணியம்மையார் விதவை மகள் திருமண திட்டம், டாக்டர் தர்மாம்பாள் விதவை மறுமணம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி திட்டங்களுக்கான நிலுவை விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் திட்டத்தின் மூலம் இந்த நிதி ஆண்டில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப தையல் இயந்திரம் பெற்று வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
முதியோர் இல்லங்கள், பணிபுரியும் பெண்கள் விடுதி, தொட்டில் குழந்தை திட்டம், வரவேற்பு மையம், வரதட்சணை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம் போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் மூலம் அக்டோபர் மாதத்தில் 14 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் அன்பழகி, வட்டாரத்தில் பணியாற்றும் சமூக நல விரிவாக்க அலுவலர்கள், மகளிர் நிலை அலுவலர்கள் மற்றும் தொழில் கூட்டுறவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.