விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவனை திமுக நிர்வாகி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் போலீசார் திமுக நிர்வாகியை தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது பூதேரி எனும் பகுதி. அங்கு வசித்து வந்த சந்தோஷ் என்ற 12 ஆம் வகுப்பு மாணவன் இருசக்கர வாகனத்தில் ரயில்வே பாலம் அருகே சென்ற பொழுது வேகத்தடையில் தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே எழுந்து நின்ற சந்தோஷ் குமார் சாலை சரி செய்யாமல் இப்படி கிடக்கின்றதே என்று கூறியதோடு அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் திட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற அபி என்ற திமுக பிரமுகர் இதனைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார்.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவனுக்கும் திமுக பிரமுகர் அபிக்கும் இடையே இதனால் ஏற்பட்ட வாக்குவாதம், தகராறாக முற்றியது. அப்பொழுது கையில் வைத்திருந்த சிறிய ரக கத்தியால் சந்தோஷின் இடது கையில் குத்தியுள்ளார். மேலும் அருகில் உள்ள சலூன் கடையில் இருந்து கத்தியை எடுத்து வந்து சந்தோஷ் குமாரின் கழுத்தில் அறுத்துள்ளார். அதேபோல அபியின் ஆதரவாளர்களும் சந்தோஷ் குமாரை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திமுக பிரமுகர் அபியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த 30 மீட்டர் தொலைவில் காவல் நிலையம் இருந்ததும் தெரியவந்துள்ளது.