நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கும் சரி, தேர்வு வந்துவிட்டால், அதுவரையிலும் இல்லாத பயம் தேடிவந்து ஒட்டிக்கொள்கிறது. கேள்விக்கு பதில் எழுதுபவர்களாக இல்லாமல், கேள்விகளைக் கேட்பவர்களாக மாணவர்கள் இருந்தால், தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றல், தானாகவே வந்துவிடும். இந்தப் புரிதலை, ஆசிரியர்களும் பெற்றோரும் மாணவன் தினேஷுக்கு ஏற்படுத்தத் தவறிவிட்ட நிலையில், பிளஸ் 2 தேர்வுக்கு முதல் நாள், அம்மாவுடைய சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
விருதுநகர் மாவட்டம், சூலக்கரையைச் சேர்ந்த முருகேசன்- ஈஸ்வரி தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். மூத்தமகன் கல்லூரியில் படிக்கிறார். இளையமகன் தினேஷ், ராமசாமி ராஜா நகரிலுள்ள ராம்கோ வித்யாலயா (CBSE) பள்ளியில் பிளஸ் 2 படித்துவந்தான். மே 5- ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதவேண்டிய நிலையில், கடும் மனஉளைச்சலில் இருந்திருக்கிறான். இதனையறியாத அவன் பெற்றோர், கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வெளியூர் சென்றுவிட்டனர்.
தாத்தா வேலுச்சாமி மட்டும் சூலக்கரை வீட்டில் இருந்திருக்கிறார். தாத்தா வீட்டிலிருந்து கிளம்பிய நேரம் பார்த்து, தனது அறையைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு உயிரைவிட்டுள்ளான். தகவலறிந்த சூலக்கரை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
என் சாவுக்கு யாரும் காரணமில்லை என்று மாணவன் தினேஷ் எழுதியுள்ளதாகச் சொல்லப்படும் கடிதத்தில், படிப்பில் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையில், தற்கொலை முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளானாம்.
மாணவன் தினேஷ் தற்கொலை குறித்து வேதனைப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர், “பெற்றோர் மற்றும் பள்ளியின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இயந்திரங்களாகவே மாணவர்கள் இயக்கப்படுகின்றனர். பள்ளியில் படிக்கும் பாடங்கள் என்பது, தினசரி வாழ்க்கையோடு தொடர்புடைய ஒன்று என்பதை மாணவர்களுக்குப் புரியும்படி செய்தால், கற்றலில் ஆர்வம் ஏற்படுவதோடு, கல்வியைச் சுமையாகக் கருதாமல் சுவையானதாக ஆக்கிக்கொள்ள முடியும். பள்ளியில் மாணவர்களுக்கு ஏற்படும் அனுபவம், வாழ்க்கையை இனிமையாக்குவதற்குப் பதிலாக, கசப்பாக்கிவிடுகிறது.
எதற்கும் தற்கொலை ஒரு தீர்வாகாது என்பதை மாணவ சமுதாயத்துக்கு நம்மால் ஏன் உணர்த்த முடியவில்லை? பாடநூல்களில் உள்ள கருத்துகளைக் குருட்டு மனப்பாடம் செய்து, தேர்வில் அப்படியே எழுதும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதென்பது, சாத்தியப்படாமலே இருந்துவருகிறது. இந்த மனப்பாட யுக்தியானது, கருத்துகளைப் புரிந்துகொள்ளாமல், மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கிறது. இதற்கென்றே, குருட்டு மனப்பாடத்திலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து செல்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10-ஆம் தேதி, குருட்டு மனப்பாடம் எதிர்க்கும் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை பழமொழி வாயிலாகவே முன்னோர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர். ஆனாலும், இன்றைய தலைமுறையினருக்கு அதனை உணர்த்த நாம் தவறிவிட்டோம்.” என்றார் ஆதங்கத்துடன்.
மனப்பாடத்தை விடுத்து, சரியான கற்றல் முறைக்கு மாறுவது என்றோ?