கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் பாலாஜி (12) அரியலூர் மாவட்டம், குழுமுரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.
இந்நிலையில் தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், வீட்டிலிருந்த பாலாஜி தனது நண்பர்களோடு சேர்ந்து நேற்று அப்பகுதியிலுள்ள பெரிய ஏரிக்கு குளிக்க சென்றுள்ளான். அப்போது ஏரியில் உள்ள தண்ணீரில் வாத்துக்கள் மேய்ந்து கொண்டிருந்துள்ளன. அதனைப் பார்த்த பாலாஜி வாத்துக்களை பிடிப்பதற்காக ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்றபோது, திடீரென சேற்றில் சிக்கிக்கொண்டு வெளியேவர முடியாமல் தத்தளித்து, கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளான். அதனை பார்த்த மற்ற சிறுவர்கள் செய்வதறியாமல் திகைத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளனர். ஆனால் வெளியிலிருந்த நபர்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள் சிறுவன் தண்ணீரில் மூழ்கிவிட்டான்.
பின்னர் இதுகுறித்து திட்டக்குடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர், பொதுமக்களின் உதவியுடன் சுமார் ஒரு மணி நேரம் தண்ணீருக்குள் இறங்கி போராடி சேற்றுக்கு அடியில் சிக்கியிருந்த சிறுவனின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெண்ணாடம் போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.