சிதம்பரம் நகரத்தில் புகழ்பெற்ற கோயில்களில் தில்லை அம்மன் கோயிலும் ஒன்று. இந்த கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலில் ஐந்து இடங்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல்களில் விழும் காணிக்கைகள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
கடைசியாக ஜனவரி மாதம் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இந்த நிலையில் தற்போது கரோனா காலமென்பதால் ஆறு மாதத்திற்குப் பிறகு செவ்வாயன்று இந்து சமய அறநிலையத்துறையின் கடலூர் மாவட்ட உதவி ஆணையர் பரணிதரன் முன்னிலையில் கோயிலில் உள்ள ஐந்து உண்டியல்களைத் திறந்து அதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
அப்போது பக்தர்கள் உண்டியலில் ரொக்கமாக ரூ 10 லட்சத்து 83 ஆயிரத்து 948 மற்றும் 40 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளி, அமெரிக்கா டாலர் 20, ஒரு பக்ரைன் தினார் இருந்தது. இது வங்கி மற்றும் கோயில் ஊழியர்கள் மூலம் எண்ணப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கோவில் செயல் அலுவலர் ராஜா சரவணகுமார், ஆய்வாளர் நரசிம்மன், கோவில் ஊழியர்கள் வாசு, ராமலிங்கம் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.