சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில் " கடந்த 26 ஆண்டுகளாக நன்னடைத்தையுடன், தண்டனை கழிந்துவிட்ட நிலையிலும் சிறையில் உள்ளேன். 26 ஆண்டுகளில் 3 முறை மட்டுமே சாதாரண விடுப்பில் சென்று உள்ளேன். 20 ஆண்டுகள் கழித்து விடுதலையாவேன் என்ற நம்பிக்கையில், எனது சொத்துக்களை பிரிக்கும் நோக்கில் எனக்கு30 நாட்கள் சாதாரண விடுப்பில் விடுவிக்க கோரியதன் அடிப்படையில் 15 நாட்கள் விடுப்பில் வந்தேன்.ஆனால் அப்போது என்னோடு பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் சொத்துப்பங்கீடு தொடர்பாக வழக்கறிஞர்களை சந்திக்கவோ, சொத்தை பார்வையிடவோ அனுமதிக்கவில்லை. தற்போது எனது அம்மாவுக்கு 62 வயதாகிவிட்ட நிலையில் அடிக்கடி நோய்வாய் படுகிறார். எனவே சொத்து மற்றும் வேளாண் விவகாரங்களை எனது தாயார் தனியாக கையாள இயலாத நிலையில் உள்ளார்.மேலும், ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசிற்கு தீர்மானம் நிறைவேற்றி மாநில அரசு கடிதம் அனுப்பியது.
அதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித முடிவும் எட்டப்படாமல் உள்ளது. எனவே, நான் சாதாரண விடுப்பில் வந்து 2 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், எனக்கு பரோலில் செல்ல உரிமை உண்டு என தமிழக முதன்மை செயலர் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடந்த 2012ல் பரோலில் வந்த நிலையில் 2014க்கு பிறகு பரோலில் வர தகுதி உண்டு. எனவே 26 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் எனது குடும்பத்தின் சொத்துப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஒரு மாதம் நீண்ட கால பரோலில் செல்ல அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி விமலா - நீதிபதி கிருஷ்ணவள்ளி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது "மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறப்படும் பேரறிவாளனுக்கு சில மாதங்களுக்கு முன்பாக விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளது. அந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், ஒரு மாத பரோல் வழங்க கூட தமிழக அரசு மறுத்துவருகிறது என தெரிவித்தார்.
அதற்கு அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவிச்சந்திரனின் உயிர் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனை கருதியே அவருக்கு பரோல் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும், சிறைத்துறைத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில்மனுவில், கடந்த முறை விடுப்பில் சென்றிருந்த போது எவ்வித சொத்துப்பதிவும் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு, கடந்த முறை வீட்டை விட்டு வெளியே செல்ல அவர் அனுமதி கோராததால், வெளியே செல்ல அனுமதிவில்லை என அருப்புக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.