
நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஓ. பன்னீர் செல்வம் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பா.ஜ.க. நிர்வாகி மற்றும் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ. பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார்.